டில்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக யமுனை ஆற்றில் நீர்மட்டமும் குறைந்து உள்ளது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் லாரிகளில் கொண்டு சென்று நீர் வழங்கப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் காலி குடங்கள், கேன்கள் உள்ளிட்டவற்றை தூக்கி கொண்டு தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அலைகின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. இந்நிலையில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. டில்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜூன் 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் வழக்கை ஒத்திவைத்தனர்.