ஒடிசாவில் இன்று நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகிறது.
ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார். சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் ஒடிசாவுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாததளம் 51 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
இதன்மூலம் 24 ஆண்டு பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதோடு ஒடிசாவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. சட்டசபை தேர்தல் தோல்வியால் முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.
இந்நிலையில் ஒடிசாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒடிசாவின் புதிய முதல்வர் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சேர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளனர்.
இதற்காக மேற்பார்வையாளர்களாக பாஜகவின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பூபேந்திர யாதவ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசா முதல்வருக்கான ரேஸில் 5 பேர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.