இந்தியா- பிரெஞ்சு இடையிலான இருதரப்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் இறுதி நிலையை எட்டிவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நமது நாட்டின் 59 ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வாங்குபவர்- விற்பவர் உறவிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றனர்.
மேலும், இந்தியா- பிரெஞ்சு இடையிலான இருதரப்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான இறுதிகட்டப் பேச்சுகளை நடத்தியதாகவும், விரைவில் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.