அறிவியல் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் 59 ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ள பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.
அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சர்கோஸி, மிக மிகச் சிறந்த நாடான இந்தியாவுடன் தங்களுக்கு உள்ள உறவுகளை மேம்படுத்திக் கொள்ளத் தான் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மிகச் சிறந்த நண்பரான சர்கோஸியின் வருகை மூலம், இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவுகள் மேலும் வலுப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.
அறிவியல் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் பிரெஞ்சு நாட்டுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இந்தியா மிகவும் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறியபோது, சர்கோஸியும் ஆமோதித்தார்.
இந்தியாவில் இரு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள சர்கோஸி பல முக்கியத் தலைவர்களையும், வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.