காஷ்மீரில் நடக்க உள்ள குடியரசு தின விழா அன்று சதிச் செயல்களுக்குத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்தில் நாளை நடக்க உள்ள குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவர்கள் ஊடுருவி இருப்பது தெரிந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட தீவிரவாதிகளின் விவரங்களை காவல் அதிகாரிகள் வெளியிடவில்லை.
கிஸ்த்வார் மாவட்டத்தில் பட்டிமோகல்லா என்ற இடத்தில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகக் காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அங்கு 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர ஏ.கே.47 துப்பாக்கிகள், 40 குண்டுகள், 2 கையெறி குண்டுகள், 13 டெட்டனேட்டர்கள், 8 பாட்டில் பிளாஸ்டிக் வெடிபொருட்கள், 18 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.
சில தீவிரவாதிகள் நேற்றிரவு இந்த ஆயுதங்களை கொண்டு வந்து பதுக்கியது தெரியவந்தது. அவர்களைப் பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.