புதிய அணையின் கட்டுப்பாட்டு உரிமையை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கேரள மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அணையை கட்டுவது, நிர்வகிப்பது, கட்டுப்படுத்துவது உள்பட அணை மீதான அனைத்து உரிமைகளும் கேரளத்தின் வசமே இருக்க வேண்டும் என்பதைதான் நாங்கள் விரும்புகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். ளார்.
புதிய அணை தொடர்பாக கேரள அரசு எடுத்துள்ள முடிவு தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாநில எதிர்க்கட்சிகளை ஆலோசித்து இந்த முடிவை அரசு எடுக்கவில்லை என்றும் தன்னிச்சையாக எடுத்துள்ளனர் என்றும் அச்சுதானந்தன் குற்றம்சாற்றினார்.
மாநிலத்தின் நலனை பாதிக்கும் இந்த முடிவை நாங்கள் ஏற்க முடியாது என்று கூறிய அச்சுதானந்தன், இது குறித்து எங்கள் கூட்டணி கட்சிகள் விரைவில் கூடி ஆலோசித்து அரசுக்கு எதிராக வலுவான முடிவை எடுப்போம் என்றார்.