மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் கிடைக்ககூடிய பலவகையான பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஒரு சில வகைகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தபடுகிறது. முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், கப்பு மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன.
மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக விளங்குவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுத்துகின்றனர். இது முகம் மற்றும் உடலின் தேவையற்ற பகுதிகளில் முடிகள் வளர்வதை தடுக்கிறது.
பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக மாறும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் பழுத்து உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து மிதமான சூட்டில், அடிபட்ட இடத்தில் தடவி வந்தால், வலியும், வீக்கமும் குறையும்.
அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளை அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களை சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கபடும்.