திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து, அரைத்து சிறு மாத்திரைகளாக்கி, உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.
திருநீற்றுப்பச்சிலை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்திக்கூர்மை உண்டாகும். மேலும் வாந்தியை நிறுத்தும். திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் கற்பூரவள்ளிச் சாறு சேர்த்து மேலே பூசிவர கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை விதையை நீரில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர, ஜுரம் வாந்தி ஆகியவற்றை குணமாக்கும். திருநீற்றுப் பச்சிலையுடன், பச்சை மஞ்சள் சேர்த்து, அரைத்து முகத்தில் பூசிவர முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி முகம் மிருதுவடையும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவிவர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி, முகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப்பச்சிலை உடன் கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச, தலை வலி, தலை பாரம் தீரும். திருநீற்றுப் பச்சிலையை முகர்ந்தால் தலை வலி, தூக்கமின்மை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்து குடித்து வர வயிற்று இரைச்சல் குணமாகும். அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து, எட்டு மணிநேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர நாலு நாட்களில் உடல் சூடு தணியும்.
திருநீற்றுப் பச்சிலையை நன்றாக சாறு பிழிந்து அதில் மிளகு இலவங்க பொடி சேர்த்து, உட்கொள்ள நாவறட்சி தீரும். திருநீற்றுப்பச்சிலையை அரைத்து சாறு பிழிந்து பதினைந்து மில்லி குடித்துவர கபம், மூச்சு வாங்குதல், சன்னி போன்றவை குணமாகும்.