ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகள் காரணமாக வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பதும், இ-பதிவு இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது
இந்த நிலையில் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற காரணத்திற்காக செல்வதாக பலர் பொய் கூறி பதிவு செய்வதால் திருமண அழைப்பிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் யாருக்கு திருமணம் எப்போது திருமணம் போன்ற விவரங்களை இ-பதிவில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் இனி இ-பதிவு குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. 1100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் டயல் செய்து இ-பதிவு குறித்த தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு செய்யும் பொது மக்கள் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.