டெல்லியிலிருந்து இ-பாஸ் பெறாமலே கோவை விமான நிலையம் வந்தவர்கள் திருப்பி டெல்லிக்கே அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்க வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். எனினும் விமான சேவைகள் தொடங்கப்பட்டதால் தமிழகத்திற்குள் விமானத்தில் வருபவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது. முக்கியமாக இ-பாஸ் பெறாமல் தமிழகத்திற்கு விமானத்தில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று விமான சேவைகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் இன்று கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு டெல்லியிலிருந்து விமானம் வந்தது. அதில் வந்தவர்களை பரிசோதித்தபோது அதில் நான்கு பேர் இ-பாஸ் பெறாமலே பயணித்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த நான்கு பேரையும் மீண்டும் டெல்லிக்கே அனுப்பி வைத்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள். இ-பாஸ் பெறாமல் தமிழகத்திற்குள் அனுமதியில்லை என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.