பெருங்களத்தூர் அருகே சாலையில் ஒன்ரறை அடி நீளமுள்ள முதலை ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியிருந்தன. அந்த சமயம் பெருங்களத்தூர் பிரதான சாலையில் பெரிய முதலை ஒன்று நடந்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் முதலை வெளியேறி இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து அந்த முதலையை கண்டறிந்து வனத்துறையினர் மீட்டனர்.
இந்நிலையில் பெருங்களத்தூர் அடுத்துள்ள ஆலம்பாக்கத்தில் ஒன்றரை அடி நீளமுள்ள சிறிய முதலை ஒன்று சாலை ஓரமாக சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து முதலையை மீட்டனர்.
ஏரி, குளங்கள் மழை வெள்ளத்தால் நிரம்பியபோது அங்கிருந்து வெளியேறிய முதலைகள் தற்போது நீர் வற்றியதால் ஆங்காங்கே சுற்றி திரிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பெருங்களத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி முதலை தென்படுவது அப்பகுதி மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.