சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்ததே விக்னேஷ் அவரை கத்தியால் குத்தியதற்கு காரணம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நேற்று பெண் நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய பாலாஜி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காததால் மருத்துவரை குத்தியதாக அவர் சொன்னதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கம், மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலுக்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், விக்னேஷின் உறவினர்களோ, மருத்துவரின் தவறான சிகிச்சையே விக்னேஷ் இந்த முடிவை எடுக்க காரணம் என கூறியுள்ளனர். புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷின் தாயார் பிரேமாவிற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தவறான ஊசியை செலுத்தியதால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை யாருமே தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் விக்னேஷின் சகோதரர் கூறியுள்ளார். மேலும் நுரையீரலை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் பிரேமா பிழைக்கமாட்டார் என்றும் மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் அப்படி நுரையீரல் மாற்று சிகிச்சை செய்வதாக எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் விக்னேஷின் உறவினர் பெண் ஒருவர் பேசும்போது, ”விக்னேஷும் இதய பாதிப்பு உள்ளவன் தான். தற்போது மருத்துவர் உயிருக்கு ஆபத்து எனும்போது இவ்வளவு பேரும் பேசுகிறீர்கள். அதேபோலதான் எங்களுக்கு இந்த உயிரும். அதை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை. அரசு ஊழியர் என்றால் ஒரு நியாயம், நடுத்தர மக்கள் என்றால் ஒரு நியாயமா?
எங்களது மருத்துவ அறிக்கை முழுவதையும் காவல்துறையினர் எடுத்துச் சென்று விட்டனர். நேற்றுதான் பிரேமாவை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்தோம். அவர்களுக்கு எவ்வளவு இழப்போ.. அதை விட இழப்பு எங்களுக்கு” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K