ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வித்தியாசமான தோற்றத்தில் ஒருவர் வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரபலமான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் தனிநபர்கள் சிலரும் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வந்த ஒருவர் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
ஜோலார்பேட்டையை சேர்ந்த மணிதண் என்ற அந்த நபர் நூதனமான உடையணிந்து தேர்தல் அலுவலகத்திற்கு பின்னோக்கியபடியே நடந்து வந்தார். ஆனால் வேட்புமனு தாக்கள் செய்ய அவரை வேட்பாளராக முன்மொழிய 10 பேர் இல்லாததாலும், டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை அவர் டிடியாக எடுத்து வந்ததாலும் அவருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி திருப்பி அனுப்பியுள்ளனர்.
விதிப்படி தேவையானவற்றை தயார் செய்து கொண்டு மீண்டும் ஜோலார்பேட்டை மணிதண் தோன்றுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.