15 நிமிடம் ஓவர் டைம் வேலைபார்த்துவிட்டேன் என கூறி சரக்கு ரயில் டிரைவர் ரயிலை பாதியிலேயே நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 7.30 மணியளவில் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. ரயில் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் அருகே சென்றபோது சரக்கு ரயில் டிரைவர் திடீரென ரயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலைய அதிகாரிகள் அந்த சரக்கு ரயில் இஞ்சின் டிரைவரிடம் கேட்டபோது பணிநேரத்தை தாண்டி கூடுதலாக 15 நிமிடம் ரயிலை இயக்கிவிட்டேன். இதற்கு மேல் என்னால் ரயிலை இயக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வழியாக செல்லும் ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பல இடங்களில் சிக்னல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் ரயில்வே கிராசிங்கை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். 2 மணி நேர கெஞ்சலுக்கு பின்னர் சரக்கு ரயில் இஞ்சின் டிரைவர் ரயிலை இயக்கினார். இதுபோன்ற பொறுப்பற்ற ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.