நான் பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை என அபிராமி சிறையில் ஒரு வழக்கறிஞரிடம் புலம்பியது தெரிய வந்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார்.
அபிராமியின் கொடூர செயலால் இரண்டு குழந்தைகளை இழந்து ஒருபக்கம் கணவர் விஜய் தவித்து வரும் நிலையில் தனது மகளின் செயலால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் அவரின் பெற்றோர் உள்ளனர். அபிராமி மீது கடுமையான கோபத்தில் இருக்கும் அவர்கள், அவளுக்காக ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அபிராமியை ஒரு வழக்கறிஞர் சந்தித்து பேசியுள்ளார். தொடக்கத்தில் பேச முடியாமல் அழுது கொண்டே இருந்த அபிராமி, அதன் பின் ‘ நான் தவறு செய்து விட்டேன். என் குழந்தைகளை கொன்றுவிட்டேன். அதற்கு மன்னிப்பே இல்லை. தற்போது தினம் தினம் சாகிறேன்’ என அழுது கொண்டே அதற்கு மேல் பேச முடியாமல் திணறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பேசிய அவர் “விஜயும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எளிமையான வீட்டில் வாழ்க்கை அழகாகத்தான் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் பணிபுரிந்த பிரியாணி கடைக்கு என் கணவர் விஜய் அழைத்து சென்றார். அதன் பின் அடிக்கடி அங்கு சென்று பிரியாணி வாங்கினேன். அப்போது பிரியாணி அதிகமாக கொடுத்து சுந்தரம் என்னை ஸ்பெஷலாக கவனித்தார்.
அதன் பின் ஆர்டர் கொடுத்தால் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார். அப்படித்தான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் விஜய் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவருடன் நெருக்கமாக பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, என்னை கண்டித்தார். ஆனால், சுந்தரத்துடன் உறவை என்னால் முறித்துக்கொள்ள முடியவில்லை.அதனால்தான், அவருடன் வாழ வேண்டும் என இப்படி செய்துவிட்டேன்” என அழுது கொண்டே அந்த வழக்கறிஞரிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.