நீண்ட நெடு காலமாக துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகள் என்பது தீர்க்கப்படாத பிரச்சனையாக இருக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கதையாகி வருகிறது. வருடா வருடம் இந்த கொடுமையால் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். துப்புரவுத் தொழிலாளி பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபடல் சட்டப்படி குற்றம்.
அதுபோன்ற சட்ட மீறலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இவை இரண்டுமோ விதிக்கப்படலாம். அப்படியிருந்தும் இவர்களுக்கெல்லாம் அரசாங்க ஒழுங்கான பாதுகாப்புக் கவசத்தை கொடுப்பதில்லை. இதுவே மரணத்திற்கு முக்கிய காரணமாகும். 1993-லேயே மனிதர்கள் நேரிடையாக மனிதக் கழிவுகளைத் துப்புரவு செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால் பல இடங்களில் இன்னும் அந்த அவலம் நடைபெற்று வருகிறது. இதனை எந்த அரசாங்கமும் வெளியே சொல்வதில்லை.
தூய்மை இந்தியா திட்டம், கழிப்பறைகள் கட்டும் திட்டம் போன்ற திட்டத்தை செயல்படுத்துகிறோம் என மார்தட்டிக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் ஏன் இந்த துப்புரவு தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை தீர்க்க போதிய கவனம் செலுத்த மறுக்கிறார்கள். ஏசி அறையில் வேலை செய்பவனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம். ஆனால் நம் கழிவுகளை கஷ்டப்பட்டு அள்ளும் துப்புரவு தொழிலாளர்களுக்கோ 10,000க்கும் கீழ் சம்பளம்.
இதில் கொடூரம் என்னவென்றால் சமீபத்தில் நடந்த ஆய்வுப்படி 5 நாட்களுக்கு ஒருமுறை ஒரு துப்புரவு தொழிலாளி மரணமடைகிறார். ஆனால் இந்த தகவலை எந்த ஒரு அரசும் வெளிகொண்டுவருவதில்லை. துப்புரவு தொழிலாளர்களின் இந்த அவல நிலை என்று மாறப்போகிறதோ? அவர்களும் நம் போல் மனிதர்கள் தான் என்று இந்த அரசாங்கம் என்று உணரப்போகிறதோ?