கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து "பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருமாறியதை அடுத்து திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கீழ்த்தரமான கருத்து ஏற்க முடியாது எனவும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதிரடியாக அறிவித்து அவரை அக்கட்சியில் இருந்து நீக்கினர்.
இதனையடுத்து ஸ்டாலின் போட்ட டிவிட்டிற்கும், ராதா ரவி மீது அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கும் நடிகை நயன்தாரா மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தின் திடீர் திருப்பமாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி தற்போது அதிமுக கட்சியில் இணைந்துவிட்டார். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தார்.