கடந்த மாதம் நடைபெற்ற தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த மறுநாள் சின்னத்திரை நடிகை நிலானி போலீஸ் உடையில் இந்த சம்பவத்தை கண்டித்து பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் பொதுமக்களை சுடுவதற்கு போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார். அதோடு, காக்கி சட்டை போட்டு நடிக்கவே வெட்கமாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிலானி மீது கடந்த 24ஆம் தேதி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குன்னூரில் ஒரு படப்பிடிப்பில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் உடையில் அவதூறு கருத்து கூறியதற்காக நடிகை நிலானி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வருகிற 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
நிலானி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வருகிற 25ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.