கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர், ஆண்டாள் என்ற பாத்திரம், திருவரங்கத்திலேயே வாழ்ந்து மடிந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.
இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மட்டுமல்லாமல் தினமணியும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்துமத ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கருத்தை பிரபல நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் கருத்து:-
பண்டைய இந்து மதம் சார்ந்த நாகரிகங்களில், தேவதாசி என்பவள் கடவுளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். ஆணுக்கு அடங்கி அடிபணிய தேவையில்லாத மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவள். பண்டைய கிரேக்கத்திலும் 'vestal virgins " உண்டு.
ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால், அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல, அரிய கெளரவம்.
கோவிலுக்கு மட்டுமே தொண்டாற்றிய பல கலைஞர்கள் காலப்போக்கில் நலிந்துவிட்டார்கள். தேவதாசி குலம் தெருவுக்கு வந்துவிட்டது.
எனினும் தேவர் அடியாள் என்றால் விபச்சாரி என்ற கருத்து வேரூன்றியது 1950க்களுக்கு அப்பால்தான். தேவர் அடியார் என்றால் கெட்ட வார்த்தை என்று பேசுபவருக்கு இந்து சமய சமூக வரலாறு சரியாக தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இதை சொன்னால் உடனே எனக்கும் தேவதாசி, விபச்சாரி போன்ற பட்டங்கள் சூட்டுவார்கள். நீ உத்தமியா என்று ஏசுவார்கள். என் ஜாதியை அலசுவார்கள்.
ஏன் என்றால், இங்கு பெண் பேசுவதே பெருங்குற்றம். உண்மையை ஆராய்ந்து சொல்வது ஊர்மேய்வதற்கு ஒப்பு. மெய்ப்பொருள் காண்பது ஒழுக்க குறைவு. தமிழை நேசிப்பதும் கலையை விரும்புவதும் களவாணித்தனம். சினிமாக்காரி மதத்தையோ தமிழையோ பற்றி வாயை திறப்பது தேசத்துரோகம்.
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இன்னும் நம்மை இறுக்கி பிடித்திருக்கும் பெண்ணடிமை , ஜாதி தளைகளை ஒரு குழந்தை அனாயாசமாக வென்றதே அன்று !! அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல, வைரகவிஞர்களும் தாயார்தான். ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி.