தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரை துரோகி என திமுக துரைமுருகன் பேசியதற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் பிரச்சாரம் செய்த திமுக பொது செயலாளர் துரைமுருகன் “எம்.ஜி.ஆர், வைகோ உள்ளிட்ட பலர் திமுகவிற்கு துரோகம் செய்துள்ளனர்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் “வரலாறே ஒரு சிலரைத் தான் தனக்கு சொந்தமாக்கி கொண்டது. அந்த ஒரு சிலரில் ஒருவர் தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கண்டனத்துக்கு உரியது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் திமுக என்ற கட்சி ஆட்சிப் பீடத்தில் அமருவதற்கும் கருணாநிதி முதலமைச்சர் ஆனதற்கும் காரணமான எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதிதான் நம்பிக்கை துரோகி என்றும், மேலும் கச்சத்தீவு உள்ளிட்ட பல விஷயங்களில் திமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.