பரபரப்பில் அதிமுக; முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள தினகரன்!
பரபரப்பில் அதிமுக; முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள தினகரன்!
அதிமுகவில் உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை இணைக்க டிடிவி தினகரன் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறதையொட்டி அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் நலன் கருதி டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். தினகரனும் ஒதுங்கிக்கொண்டார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறினார். ஆனால் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பெங்களூர் சென்று சசிகலாவிடம் ஆலோசனை பெற்றார்.
அதன் பின்னர் பெங்களூரில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தான் 60 நாட்கள் பொறுமையாக இருக்கப்போவதாகவும் அதற்குள் அதிமுக அணிகள் ஒன்று சேரவில்லையென்றால் தான் மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் அவர் விதித்த அந்த 60 நாட்கள் கெடு இன்றுடன் முடிகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பேசிய தினகரன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அதாவது நாளை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறினார். இது அதிமுகவின் எடப்பாடி அணிக்கு எரிச்சலை அளித்தது.
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் நுழைந்தால் அவரை கைது செய்யவோ அல்லது அவரது நுழைவை தடுக்கவோ வேண்டும் என எடப்பாடி அணியில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பேசிய தினகரன் ஆகஸ்ட் 4 அதாவது கெடு முடியும் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறினார். இதனால் தற்போது தினகரனின் அடுத்தக்கட்ட அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.