திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி, தனக்கு எழுந்த சந்தேகத்தையே கேட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் மீண்டும் குட்டையை கிளப்பியுள்ளார்.
1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டினர். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட மாஃபா அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! என பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம் என கூறினார்.
இதோடு இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளாமல் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அவர் கூறியதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி, தனக்கு எழுந்த சந்தேகத்தையே கேட்டேன்.
மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை அவரே வெளியிட்டிருக்கலாமே, இன்னும் 2 நாட்கள் கழித்து இது குறித்து விரிவான பதிலடியை தருகிறேன் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.