ஜெயக்குமாருக்கு எந்த யோக்கியதையும் இல்லை! அருகதையும் இல்லை!: தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஆவேசம்!
ஜெயக்குமாருக்கு எந்த யோக்கியதையும் இல்லை! அருகதையும் இல்லை!: தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஆவேசம்!
டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் முன்னர் கூறியிருந்தனர். அந்த முடிவு தற்போதும் அப்படியே தொடர்வதாக இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
கடந்த 45 நாட்களுக்கு முன்னர் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறினர். இதனையடுத்து தினகரனும் தான் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன் என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும், தான் மீண்டு கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார் தலைமையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த முடிவு அப்படியே தொடர்கிறது, அவரும் தான் கூறியது போல ஒதுங்கி இருக்க வேண்டும் என்றார். மேலும் கிளை கழக தொண்டர்கள் வரை யாரும் தினகரனை சந்திக்கமாட்டார்கள் என்றார்.
இதனையடுத்து தினகரன் அணியில் உள்ள பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைப்பேசி மூலம் பேட்டியளித்த போது தினகரனை ஒதுக்கி வைப்பதாக கூற அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை, அருகதையும் இல்லை என சாடினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரனும் தன்னை ஒதுக்கி வைப்பதாக கூற கட்சியில் யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் போது துணைப் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நிதியமைச்சர் ஜெயக்குமார் வானளாவிய அதிகாரம் கொண்டவர் போல பொதுச்செயலாளர் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டவர் போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.