கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அடுத்து அவருக்கு அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதிமுக சார்பாக 2014 முதல் 2019 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன். கடந்த ஜூலையோடு இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி அளிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதனால் அவருக்கு அதிமுக தலைமை மேல் அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அடுத்து அவருக்குப் பலரும் அஞ்சலில் செலுத்திய நிலையில் தனது முகநூலில் மைத்ரேயனும் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் ‘ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அம்மா, கலைஞர் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி’ எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை மேல் அவர் அதிருப்தியில் இருந்தும் அவரைத் தலைமைக் கண்டுகொள்ளாததால் அவர் திமுக பக்கம் சாய விரும்புவதாகவும் அதனால்தான் இந்த அஞ்சலிக் குறிப்பு மூலம் தூது விடுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.