தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களின் மீது அதிமுகவினர் விளம்பரம் தேட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைய முதல்வர் பழனிசாமி ஆகியோரின் படம் உள்ள ஸ்டிக்கரை ஒட்டி அனுப்புகின்றனர்.
கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை அங்கே ஏற்படுத்தியுள்ளது இவ்வெள்ளம். பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் பொருட்களின் மீது அதிமுகவினர் அற்ப விளம்பரத்தை தேட, பொருட்களின் மீது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி அலப்பறை செய்து வருகின்றனர். தன்னார்வலர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் மீதும் அவர்கள் ஸ்டிக்கரை ஒட்டி அட்டுழியம் செய்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போதும் அதிமுகவினர் இதே போல் அராஜகம் செய்ததால், ஸ்டிக்கர் பாய்ஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. தற்பொழுது ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
அதிமுகவினர் சிலர் செய்யும் கீழ்த்தரான அரசியல் விளம்பரம், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.