முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்த பின்னர் திரையுலகினர் பலருக்கு முதல்வராகும் ஆசை வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. நடிகர்கள் சும்மா இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவர்களும் ரசிகர்களும் உசுப்பேற்றி நடிகர்களை அரசியலுக்கு வரவழைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் களத்தில் இறங்கிவிட்டனர். விஷால் களமிறங்க நேரம் பார்த்து கொண்டிருக்கின்றார். விஜய்யிடம் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் அரசியல் அறிவிப்பு வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் அஜித்தையும் தற்போது அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், 'விஜய், அஜித் போன்றோர் அரசியலுக்கு வரலாம் என்றும் குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் சிவாஜி முதல் விஜயகாந்த் வரை அரசியலுக்கு வந்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என்பதை அரசியலுக்கு வருமுன் நடிகர்கள் யோசித்து பார்ப்பது நல்லதாக கருதப்படுகிறது.