மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் எனவும், அது அமிருதாவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், ஜெ.வின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு வலியுறுத்தி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா “நான் ஜெ.வின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவர்தான் என் தாய் என் உறவினர்கள் அனைவரும் கூறினர். அதை நிரூபிக்கவே டி என். ஏ சோதனை செய்யுமாறு கேட்டேன்.
போயஸ்கார்டன் வீட்டில் அவரை சந்திக்கும்போதெல்லாம், இங்கிருந்து நீ சென்றுவிடு.. நீ உயிரோடு இருந்தால் போதும் என ஜெயலலிதா பலமுறை என்னிடம் கூறினர். என்னை ஆரத்தழுவி, கட்டியணைத்து முத்தம் கொடுப்பார். அவர்தான் என் அம்மா என்பது இப்போதுதான் புரிகிறது. அதை நான் உணர்கிறேன். விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என அம்ருதா கூறியிருந்தார்.மேலும், நான் ஜெ.வின் மகள் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தெரியும் எனக் கூறினார்.இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகள் லலிதா அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது தாயின் அண்ணன் மகள்தான் ஜெயலலிதா. அதாவது எனக்கு தாய் மாமா மகள். ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரியும். அதன் விளைவாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் உண்மை. எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பிரசவம் பார்த்தார்.
இதுபற்றி வெளியே கூறக்கூடாது என ஜெயலலிதா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். 1970ம் ஆண்டுக்கு பின் ஜெ. எங்கள் குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
ஜெ.விற்கு பிறந்த குழந்தையை அவரின் சகோதரி முறையான சைலஜாதான் வளர்த்தார். எனவே, அம்ருதா கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. டி.என்.ஏ சோதனை பார்த்தால் உண்மை தெரியவரும். சொத்துக்கு ஆசைப்பட்டு அம்ருதா இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. ஜெயலலிதாவே தன் தாய் என அம்ருதா நினைக்கிறார். ஆனால், எங்களிடம் எந்த ஆதரமும் இல்லை. அது தேவை என அப்போது எங்களுக்கு தோன்றவில்லை ” என அவர் தெரிவித்தார்.
லலிதா கூறியிருப்பது அம்ருதா கூறியதோடு அப்படியே ஒத்துப்போகிறது. ஆனாலும், டி.என்.ஏ சோதனை செய்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்.
லலிதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.