Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

aavin

Mahendran

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:31 IST)
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை: கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை  பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து,  அதே 9 % கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
 
ஆவின் கிரீன் மேஜிக்  பிளஸ்  பாலின்  விலை அதிகரிக்கப்பட்டிருப்பது   மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் உறையின் வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக  சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.
 
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் கூடுதல் வகையாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால், தமிழ்நாடு முழுவதும் இந்த வகை பாலை அறிமுகம் செய்து விட்டு,  லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான்  ஆவின் நிறுவனத்தின் திட்டம் ஆகும். இதன் மூலம் ஆவின் பச்சை உறை பாலை  நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.  
 
விலை உயர்வை விட கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது தான். இது வணிக அறம் அல்ல. வழக்கமாக தனியார் நிறுவனங்கள் தான் விலை உயர்வை மக்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான அளவைக் குறைக்கும் மோசடியில் ஈடுபடும். தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை  அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி ஆரஞ்சு வண்ண உறையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆவின் பச்சைப் பாலுக்கு மாற்றாக அதே விலையில்  3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்து மறைமுக விலை உயர்வை அரசு திணித்தது. பா.ம.க.உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அப்போது ஆவின் பச்சைப் பாலின் விற்பனை கைவிடப்படவிருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது.  இப்போது ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.11 உயர்த்தப்படுகிறது.
 
அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது.  அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44  என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல்,  இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?