அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி தொகுதி திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தொகுதிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பிரச்சாரம் செய்வது குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் ஒரு தரப்பு அனிதா ராதாகிருஷ்ணனை தாக்கி பேசியதோடு தாக்கவும் முயன்றதாகவும் அவர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர் என்று விமர்சனம் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த பரபரப்பு காரணமாக அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்யா போட்டியிடுகின்றனர்.