கோவையில், 20 அடி உயர மரத்தில் தொங்கியபடி பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லிய கோயில் பூசாரி , தவறி விழுந்து உயிரிழந்தார்.
கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான ஸ்ரீ அய்யாசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. . அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இக்கோயிலில் அய்யாசாமி என்பவர் பூஜை செய்வது வழக்கம். ஆண்டு தோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அங்கு இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி மகாசிவாரத்திரி அன்று நள்ளிரவில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர மரத்தின் மீது அமர்ந்து கொண்டு அய்யாசாமி குறி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக, திடீரென நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். பக்தர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அய்யாசாமி உயிரிழந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து இறந்ததால், அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். பூசாரி மரத்தில் இருந்து தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.