அதிமுக - பாஜக கூட்டணி தொடருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கும் நிலையில், அக்கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும் கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா என்பது குறித்து கடந்த சில நாட்களாக சில அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியருந்தது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, அதிமுகவில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் நீண்ட காலத்துக்கு முன்பே துவங்கிவிட்டதாக தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேட்டபோது, "இப்போது முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். துணை முதலமைச்சர் அவருக்கு துணையாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமைக் கழகம் அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, சட்டமன்ற தேர்தலின்போது பாஜக தலைமையில்தான் கூட்டணி எனக் கூறியது குறித்து கேட்டபோது, "இப்படி யார் சொன்னது? அந்தக் கட்சியின் மாநில தலைவர் சொன்னாரா, தேசிய தலைவர் நட்டா சொன்னாரா? நேற்று ஒரு கட்சியில் இருந்தவர், அதற்கு முன்பாக வேறு கட்சியில் இருந்தவர் ஏதோ ஆதாயத்துக்காக சொல்வதை ஏற்க முடியாது. அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், அதிமுக கூட்டணி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.