போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிலும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் ஆடிப்போன போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் போயஸ் கார்டனுக்கு விரைந்து ஜெயலலிதாவின் வீட்டிலும், ரஜினிகாந்தின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் வெடுகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீஸார் மர்மநபர் அழைத்த நம்பரை டிரேஸ் செய்தபோது அது கோவையில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை போலீஸார் இதுகுறித்து கோவை போலீஸை அணுக அவர்கள் மிரட்டல் விடுத்த முகமது என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். மன அழுத்தத்தால் இப்படி செய்துவிட்டதாக அந்த வாலிபர் கூறியிருக்கிறார். இச்சம்பவத்தால் சற்று நேரம் போயஸ் கார்டன் உச்சகட்ட பரபரப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.