தமிழக அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் மதிய உணவு திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைத்த திமுக இனி மாணவர்களுக்கான காலை உணவு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது.
அதன்படி சோதனை முயற்சியாக முதலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகள் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மதிய உணவு திட்டத்தை போல இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக பரிசீலிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சாதகமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.