கொடநாட்டில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வெளிவந்த எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகளால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சுற்றுலாத் தளமான கொடநாட்டிற்கு, இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தேவைக்காக பெரும்பாலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
கோத்தகிரி-கொடநாடு செல்லும் சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் அந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களும் உள்ளன. நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத்தனர். அப்போது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன பல 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், வங்கி அதிகாரியிடம் கூறினர். ஆனால் பணி நேரம் காரணமாக வங்கி அதிகாரிகள் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனால் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் மாணவர்கள்.
இதற்கு முன்பு, இது போன்ற எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகள் ஏ.டி.எம்.-ல் பல முறை வந்துள்ளதாகவும், இதனை குறித்து வங்கிகள் சரிவர எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை எனவும் கொடநாடு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால் கொடநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் மன உலைச்சலுக்கும், அவதிக்கும் உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.