தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காருக்கு பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பாஸ்டேக் வசதி இந்தியா முழுவது உள்ள சுங்கசாவடிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தியாகராய நகரை சேர்ந்த கபிலன் என்பவருக்கு நள்ளிரவில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர் ஸ்ரீபெரும்பத்தூர் சுங்க சாவடியை கடந்து சென்றதற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக இருந்துள்ளது.
உடனடியாக பாஸ்டேக் கணக்கை சோதித்த கபிலன் தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் அவரது கார் அவரது வீட்டில்தான் இருந்துள்ளது. இதுகுறித்து பாஸ்டேக் மற்றும் ஏர்டெல் பேமண்ட் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டும் சரியான பதில் அவருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
வழக்கறிஞரான கபிலன் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஸ்டேக் கட்டண முறையில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகவும், அதனால் பாஸ்டேக் முறையை தடை செய்ய வேண்டும் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.