கர்நாடக அரசு காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரமறுத்து வந்த நிலையில் அங்கு பெய்த மழையால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரில் 100 டிஎம்சி காவிரி நீர் கடலில் வீணாக கலப்பதாக தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம், சீர்காழி இடையே கடலிலும் கலக்கின்றன.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. அதாவது, மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி-ஐ விட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.