மதுரை நகர் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை நகர் பகுதிகளுக்கு உட்பட்ட தெற்கு வாசல் ,திருப்பரங்குன்றம் ,அவனியாபுரம், திடீர் நகர், தல்லாகுளம், செல்லூர் ,அண்ணா நகர் மற்றும் கூடல்புதூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களை விசாரிக்க மாநகர காவல் துறை ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நகர் பகுதியில் மட்டும் காணாமல் போன 27 லட்சம் மதிப்புள்ள 265 செல்போன்கள் மீட்கப்பட்டு,மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று செல்போனின் உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவிழா காலங்களில் இது போன்ற செல்போன் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என காவல்துறை ஆணையர் நரேந்திர நாயர் தெரிவித்தார். மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் , காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.