சென்னையில் மாநகர பேருந்து நடத்துனர் பயணியுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா ஆர்ச் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த பேருந்தில் இருந்த நடத்துநருக்கும், டிக்கெட் எடுக்கும் பயணி ஒருவருக்கும், டிக்கெட் எடுக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த பயணி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதாகவும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நடத்துநர் ஜெகன் என்பவர் பேருந்தில் இருந்து தடுமாறி, படிக்கட்டு வழியாக கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நடத்துனர் கீழே விழுந்ததற்கு காரணமான பயணி கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் 46ஜி பேருந்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் இருந்து கீழே விழுந்து இறந்த நடத்துநருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் எடுக்கும் ஒரு சின்ன பிரச்சனை காரணமாக நடத்துனர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம், அந்த பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.