சென்னையில் கொரோனா பாதிப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பலவை குறைக்கவும், குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் 587 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்துடன் ஊரடங்கு முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை முழுவதுமாக தடுப்பு போட்டு அடைக்காமல் வைரஸ் பாதித்த வீடு மற்றும் சுற்றியுள்ள இரண்டு, மூன்று வீடுகள், அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றை மட்டும் தடுப்பு கொண்டு அடைக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை கொண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மறுபயன்பாடு செய்யும் வகையில் துணியால் ஆன மாஸ்க் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.