தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10 முதல் 12 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நடந்து வந்த நிலையில் 19 தேதி திருப்புதல் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “கொரோனா மூன்றாவது அலை அதிகரிப்பதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் ஆசிரியர், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு “10 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.