தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் தேர்தலை வேறு இடத்தில் நடத்த நடிகர் சங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுமாறு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையின்போது 'பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேர்தலை வேறு இடத்திற்கு மாற்றினால் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
சென்னைக்கு வெளியில் வெகு தொலைவில் தேர்தலை நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் வர மாட்டார்கள் என தெரிவித்த நடிகர் சங்க வழக்கறிஞரிடம் நீதிபதி, ”வேண்டுமென்றால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை” தேர்வு செய்யுமாறு நடிகர் சங்கத்திற்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் பரிசீலித்து அதை நீதிமன்றத்தில் நாளை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.