தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆட்சிக்கு வந்தபோதே கொரோனா என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினோம். தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை ஆலோசனைக் குழுவின் துணையோடு ஆய்வின் அடிப்படையில் அமைத்தோம். அதன் பயனைக் கடந்த பருவமழைக் காலங்களில் கண்கூடாகப் பார்த்தோம். சிறுமழைக்கே நீர் தேங்கிய பகுதிகளில், தற்போது பெருமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிவதை மக்களும் ஊடகங்களும் எடுத்துரைத்தனர்.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் எஞ்சியுள்ள பகுதிகளிலும் இன்று ஆய்வு மேற்கொண்டேன். இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத்தடுப்பு மேலாண்மையில் சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு! என்று தெரிவித்துள்ளார்.