சென்னையில் ஜெராக்ஸ் கடை தீப்பிடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் சுகன்யா. இவருக்கு வெங்கடேசன் என்பவரோடு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யா புதுப்பாக்கத்தில் வணிக வளாகம் ஒன்றில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் ஜெராக்ஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சுகன்யா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது ஆசாமி ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன் செல்வது பதிவாகியிருந்தது.
இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில் அந்த நபர் சுகன்யா கடைக்கு பக்கத்தில் காயில் கட்டும் கடை வைத்திருக்கும் குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து குமாரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவராகவே கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் சுகன்யாவுக்கு பல உதவிகள் செய்து வந்ததாகவும், ஒரு சமயத்தில் அவரை காதலிப்பதாக கூறியதாகவும், ஆனால் அதற்கு சுகன்யா மறுத்ததுடன், தனது கணவரிடமும் சொல்லி மிரட்டியதால் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.