Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

INDIAதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக திகழும்: முதல்வர் ஸ்டாலின்

mk stalin
, திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:50 IST)
INDIAதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக திகழும் என திமுக தலைவராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆனதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
 "திமுக எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது.
 
அதுபோல, திமுகவினரும் இந்த இயக்கத்தின் லட்சியமே பெரிது என்று ஒன்றுபட்டு உழைக்கும்போது மகத்தான வெற்றி கிடைக்கிறது. திமுக தமிழகத்தை நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது உங்களில் ஒருவனான என் இலக்கு. தொடர்ச்சியாக நாம் ஆட்சியில் இல்லாத சூழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி எந்தளவு பாழ்பட்டது என்பதைப் பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பார்த்தார்கள். அனுபவித்தார்கள். அந்த நிலையைக் கடந்த இரண்டாண்டுகளில் பெருமளவு மாற்றி இருக்கிறோம். வளர்ச்சிப் படிக்கட்டுகளில் தமிழகம் முன்னேறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இந்த வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் திமுக தொடர்ந்து ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமைய வேண்டும்.
 
ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மக்கள் அறிவார்கள். தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இத்தகைய நிலையிலும், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அயராமல் உழைக்கிறது திராவிட மாடல் அரசு. விடியல் வெளிச்சத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
 
ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும்.
 
இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். திமுக தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி.. வெற்றி.. மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். திமுகவினர் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும் என்பது தலைவர் என்ற முறையில் எனது அன்பு வேண்டுகோளாகும். உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க நான் இருக்கிறேன். என் வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் இருக்கிறீர்கள். நம் உயிருக்கு உயிராகத் திமுக எனும் பேரியக்கம் இருக்கிறது.
 
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுக எனும் பேரியக்கம், நமது மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்" என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடல்