Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு  மாற்றாக தேங்காய் எண்ணெய்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!
, வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (11:42 IST)
நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு  மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின்  நலன்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரி விடுதலை நாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களின் போது நூற்றுக்கணக்கான இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.  தென்னை விவசாயிகளின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு  போதிய விலை கிடைப்பதில்லை.  அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும், தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்கவும்  நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அந்தக் குரல் தான் இப்போது கிராமசபை தீர்மானமாக  எதிரொலித்திருக்கிறது.
 
தமிழ்நாட்டில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.  ஆண்டுக்கு 500 கோடிக்கும் கூடுதலான  தேங்காய்கள்  விளைகின்றன. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு தேங்காய்கள் வருவதால், அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு நியாயவிலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவது தான். அதன் மூலம் தேங்காய்க்கான தேவை அதிகரித்து  விலையும் உயரும். நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில்  நியாயவிலைக்கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  6 மாவட்டங்களில் மட்டும்  இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால்  எதிர்பார்த்த பயன் கிடைக்காது.  ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 2 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் தான்  தென்னை விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன்கிடைக்கும். எனவே,  மத்திய அரசுடன்  தமிழக அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு.. திட்டமிட்டபடி நடக்குமா?