நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதா மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு அதற்கேற்ப தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்ட போதே தேவையான இருக்கைகளை விட அதிகமான இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்பட்டது. இதனால் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது. அந்த வகையிலேயே தற்போதைய செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
இந்த தொகுதி மறுவரையறை என்பது வட இந்திய மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை அதிகரித்து தென் மாநிலங்களின் செல்வாக்கை குறைக்கும் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “தென்னிந்திய மாநிலங்களின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள் தொகை மூலம் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதி முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.