போலியோ சொட்டுமருந்து முகாம்களைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் பெருமளவு போலியோத் தாக்குதல் குறைந்துள்ளது. இருந்தாலும் இன்னமும் இந்தியா போலியோ அற்ற நாடு என்னும் நிலையை எட்டவில்லை.
இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதிக்குள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்கள் இன்னும் நடத்தப்படவில்லை. அதற்கு மத்திய அரசு சார்பில் போதிய அளவில் சொட்டு மருந்துகள் கைவசம் இல்லை என்று கூறப்பட்டது. இது நாடு முழுவதும் விமர்சனங்களை உருவாக்கியது. இது சம்மந்தமாக பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஜான்சி ராணி என்பவரால் தொடரப்பட்டது.
அவரது மனுவில் ‘இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. அதில் 18 வயதுக்குட்பட்டோர் 32 கோடி பேர் உள்ளனர். ஒரு நாட்டின் சுகாதாரமே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையாகும். சுகாதாரத்திற்காக மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகின்றன. ஆனாலும் தற்போது தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் முறையாகவும், தொடர்ச்சியாகவும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் ‘தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. வரும் 10ஆம் தேதிகூட சொட்டுமருந்து முகாம் நடைபெறவிருக்கிறது.’ எனத் தெரிவித்தார். அப்போது, போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடப்பது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லையெனவும், விளம்பரங்கள் கொடுக்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
இதைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்களின் மூலம் போலியோவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது மக்களை எளிதில் சென்றடையும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.