கடந்த ஆண்டு நீட் தேர்வால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதா மரணத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில் நேற்று கடலூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று கருதி மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவைரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 2017ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி 1150 மதிப்பெண்கள் பெற்றார். இருப்பினும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் கிடைக்காததால் அவருக்கு கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது பெற்றோர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கடந்த ஒருவருடமாக நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுத்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் அருள்பிரகாஷ் நீட் தேர்வை எழுதினார். ஆனால் நேற்று நீட் தேர்வின் மாதிரி விடைத்தாள் வெளியானது. இந்த விடைத்தாளுடன் தான் தேர்வு எழுதியதை ஒப்பிட்டு பார்த்த அருள்பிரகாஷ், இந்த ஆண்டும் தனக்கு நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதையும் இந்த ஆண்டும் தனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது அறிந்து கொண்டார். இதனால் மனமுடைந்த அவர் நள்ளிரவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.