விடிய விடிய எங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடிந்தவுடன் ஆட்டுக்குட்டியை அழைத்து கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்து விட்டார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அதிகாலையில் ராமதாஸ் வீட்டுக்கு சென்ற அண்ணாமலை கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து சிவி சண்முகம் பேட்டி அளித்த போது தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் கொள்கையை பாமக கடைப்பிடித்து வருவதாகவும் தனது கட்சியை அவர் ஏலம் விடுகிறார் என்றும் விடிய விடிய எங்களுடன் கூட்டணி பேசிய ராமதாஸ் விடிந்ததும் ஆட்டுக்குட்டியை வரவழைத்து பேசுகிறார் என்றும் காட்டமாக பேசி உள்ளார்.
பிரதமர் மோடி நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்திற்கு கூஜா தான் என்றும் நெய்வேலியில் என்எல்சி போராட்டம் நடத்திய அன்புமணி மூன்றாவது சுரங்கத்தை மூட மோடியிடம் கோரிக்கை வைப்பாரா என்றும் அவர் கூறினார்.