சென்னையில் உள்ள கால்பந்து மைதானங்களை தனியாருக்கு ஒப்படைக்க தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், அதன் மீது கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அந்த தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து மைதானங்களை தனியாரிடம் ஒப்படைத்து, ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 வசூலித்து மைதானத்தில் விளையாட அனுமதிக்கும் வகையில் சமீபத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
விளையாட்டு திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் ஏழை எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகும் என்று கருத்து தெரிவிக்கப்பட நிலையில், தற்போது அந்த தீர்மானத்தை திரும்ப பெற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை மேயர் ப்ரியா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மாணவ - மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டு திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக கொள்கிறேன்.